ஞாயிறு, 22 மார்ச், 2015

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..









அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது
பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது,
இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட
சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின.

சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு
நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின்
எழுத்தை விரும்பிப் படிப்பேன் -
அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம்.
20 வயதில் பணி கிடைக்கப்பெற்று, மத்தியப்பிரதேசத்திலுள்ள
ஜபல்பூர் நகரத்திற்குப் போய் விட்டேன்.
ஜெயகாந்தன் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டுமே
என்பதற்காக, அப்போது ஜெயகாந்தன் எழுத்துக்களை தொடர்ந்து
பிரசுரித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன் வார இதழுக்கு
வருட சந்தா கட்டி, தபால் மூலம் வாராவாரம்
பெற்றுக் கொண்டிருந்தேன்.

என் பெற்றோர்கள் அப்போது பாண்டிச்சேரியில் இருந்தனர்.
என் சகோதரிக்கு திருமணம் நிச்சயம் ஆனபோது,
அது தொடர்பான வேலைகளை கவனிக்க 1965 -ல்
ஒரு மாதம் ‘லீவு’ எடுத்துக் கொண்டு பாண்டி வந்தேன்.

அப்போது தான் ஜெயகாந்தன் “உன்னைப்போல் ஒருவன்”
படத்தைத் தயாரித்திருந்தார். அவரே எழுதி, இயக்கிய படம் அது.
‘Art Film’ வகையில் இருந்ததால், விநியோகஸ்தர்களோ,
திரையரங்கங்களோ – யாரும் அந்தப் படத்தை வாங்க / திரையிட
முன்வரவில்லை.

வேறு வழியில்லாமல், ஜெயகாந்தன் அவர்கள், தானே நேரடியாக
திரைப்படத்தை வெளியிட முயற்சி செய்தார். முதலில்
இரண்டு, மூன்று பிரதிகள் மட்டுமே போட்டார் என்று
நினைக்கிறேன். ஊர் ஊராகச் சென்று ஒன்றிரண்டு தினங்களாவது
திரையிட முயன்று வந்தார். (கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாகி
விட்டன – நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு எழுதுகிறேன் –
கூறுவதில் எங்காவது சில தவறுகள் இருக்கக்கூடும் ….)

பாண்டிச்சேரியில் இருந்த என் நண்பர் வட்டம், “உன்னைப்போல்
ஒருவனை” எப்படியாவது பாண்டியில் ஒரு காட்சியாவது
திரையிட்டு விட வேண்டுமென்று வெறியாக இருந்தது.
இரண்டு நண்பர்கள் நேரடியாக சென்னை சென்று ஜெயகாந்தன்
அவர்களைத் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விட்டனர்.

ஜே.கே.வுக்கும், இதற்காக பாண்டிச்சேரி வரவேண்டும் என்கிற
ஆர்வம் இருந்தது.

பாண்டி, “அஜந்தா” தியேட்டரை ஒரு காலைக்காட்சிக்காக
வாடகைக்கு எடுத்தோம். ( அப்போதெல்லாம் தினசரி 3 காட்சிகள்
மட்டுமே… எப்போதாவது பிற மொழிப்படங்கள் வந்தால்,
ஞாயிறு மட்டும் காலைக்காட்சி போடுவார்கள்…)
வாடகை கொடுத்தால், தியேட்டரை ஒரு காட்சிக்கு பயன்படுத்தக்
கொடுப்பார்கள். விளம்பரம், வசூல், செலவு, அனைத்தும்
நம் பொறுப்பு.

ஒரு போஸ்டர் கூட அச்சடிக்கவில்லை. கையாலேயே
போஸ்டர் தட்டிகள் தயாரித்தோம். முக்கியமான இடங்களில்,
தட்டிகளை வைத்தோம். சிறு ஊர் என்பதால் (அப்போது ….! )
சிரமமில்லை.

எல்லா தியேட்டர் வாசல்களிலும், ஊருக்குள் நுழையும்
3 மார்க்கங்களிலும், பட்டாணிக்கடை, பீச், பார்க், லைப்ரரி,
மணக்குள விநாயகர் கோவில் அருகே, ரங்கபிள்ளைதெரு
போஸ்ட் ஆபீஸ் வாசல் என்று –
அனைத்து இடங்களிலும் கையால் எழுதப்பட்ட போஸ்டர்கள்.
அவற்றில் பல என் கையால் எழுதப்பட்டவை ….!!

பரபரப்பான அந்த ஞாயிறு வந்தது.
படப்பெட்டியுடன் ஜெயகாந்தனும் வந்தார்.
அப்போது சுமார் 31-32 வயது தான் இருக்கும் அவருக்கு……..!
மிகத் துடிப்பாக இருந்தார்….

தியேட்டர் முழுவதும் கட்டணம் – ஒரே ‘ரேட்’
என்று வைத்திருந்தது.
கிட்டத்தட்ட தியேட்டர் நிரம்பி இருந்தது.
ஒன்பதரை மணிக்கு படம்.
படம் துவங்கும் முன் ஜெயகாந்தன் பேசினார்.

கூட்டம் மிக ஆவலுடன் படம் பார்க்கக் காத்திருந்தது …
படம் மிக மிகச் சுமாராகத்தான் வந்திருந்தது.
ஒளிப்பதிவு மிக மோசம்.
பல இடங்களில் ஒலிப்பதிவும் சரி இல்லை.
மேலும் படம் அவ்வளவு மெதுவாக( slow movie )
இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அவருக்குப் சற்றும் பொருந்தாத வேலை …..

ஆனால் நாங்கள் ஜே.கே.யை விரும்பியது
இந்த திரைப்படத்துக்காக இல்லையே ……
ஆக – படத்தைப் பொருத்த வரை ஏமாற்றமாக இருந்தாலும்,
ஜெயகாந்தனை நேரில் சந்தித்ததில், அவருடன்
உரையாட வாய்ப்பு கிடைத்ததில் எங்கள்
அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி…..

இன்று, அவருக்கு 80 வயது நிரம்பப்பெற்ற நிலையில்,
விழா நடக்கையில் அவர் பேசுவதையும் –
முதிர்ந்த அவரது முகத்தைப் பார்க்கும்போதும்
மனதில் என்னென்னவோ உணர்வுகள்……
காலம் தான் எவ்வளவு மாற்றங்களை கொண்டு
வந்திருக்கிறது ….!

இவை ஒரு பக்கம் இருக்க –

எழுத்தாளர் ‘சமஸ்’ அவர்கள், ஜே.கே.யின்
பிறந்த நாளையொட்டி அவருடன் நிகழ்த்திய
‘நேர் காணல்’ ஒன்றினை அண்மையில் படித்தேன். 
மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அதைக்காண வாய்ப்பு
பெற்றிராத, ‘விமரிசனம்’ வலைத்தள நண்பர்களுக்காக,
அந்த நேர்காணலின் சுவையான பகுதிகள் கீழே –

———–

• இந்த வயதில், இன்றைய சூழலில் ஜெயகாந்தனின்
ஒருநாள் எப்படி இருக்கிறது?

நீங்கள் அந்த வயது, அந்தச் சூழல் என்று எதை நினைத்துக்

கேட்கிறீர்களோ, அப்போது இருந்த மாதிரிதான் இந்த வயதில்,
இந்தச் சூழலிலும் ஒருநாள் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்,

அன்றைக்கு நான்கு மணிக்குப் பொழுது விடிந்தபோது,
எனக்கும் நான்கு மணிக்கு விடிந்தது. இன்றைக்கு நான்கு
மணிக்குப் பொழுது விடியும்போது, எனக்கு எட்டு
மணிக்குத்தான் தெரிகிறது.

• கோடைக் காலத்தில் பகல்களையும், மழைக் காலத்தில்
இரவுகளையும் நீண்டதாக உணர்கிறோம். அதுபோல,
இளமையில் ஒருநாளை உணர்வதற்கும் முதுமையில்
ஒரு நாளை உணர்வதற்கும் வேறுபாடு ஏதும் தெரிகிறதா ?

இளமையில் ஒரு நாள் பொழுது என்பதைச் சின்னதாக
உணர்ந்திருக்கிறேன். முதுமையில் அது இன்னமும்
சின்னதாகத் தெரிகிறது.

• தமிழில் வேறு எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத
சம கால மரியாதை – உங்கள் ஞானகுரு பாரதிக்கும்
கூடக் கிடைக்காதது – உங்களுக்கு மட்டும் வாய்த் திருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சாமானிய மக்களுடைய வாழ்க்கையை எழுதியதும்,
அந்த எழுத்தோடு ஒட்டி வாழ்ந்ததும் காரணம்
என்று நினைக்கிறேன்.

• ஊடகங்கள் எல்லாக் காலங்களிலும் கொண்டாடிய,
கொண்டாடும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்கள்.
ஊடகங்களோடு உறவாடுவதில் சூட்சமம் ஏதும் இருக்கிறதா?

என் எழுத்தினால் நின்றேன்; என் எழுத்தின் மீது
நான் நிற்கிறேன். இதுதான் ஒரே சூட்சமம். யாரிடமும் நான்
மண்டியிட்டுக் கைகூப்புவது கிடையாது.

• ஆரம்ப காலத்தில் சிறுபத்திரிகைகளே உங்கள் களம்.

சிறுபத்திரிகைகளில் தீவிரமான வாசிப்புத் தேடல் கொண்ட
ஒரு சின்னக் கூட்டத்துக்கு எழுதுவதற்கும் வெகுஜனப்
பத்திரிகைகளில் பரந்துபட்ட வாசகர்களுக்கு எழுதுவதற்கும்
என்ன வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்? இந்த மாற்றம் உங்கள்
எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

வெகுஜனப் பத்திரிகைகள்தான் என்னை மக்களிடத்தில்
கொண்டுபோய்ச் சேர்த்தன என்றாலும், வெகுஜனப்
பத்திரிகைகளிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை

சிறுபத்திரிகைகள்தான். சிறுபத்திரிகைகளில்
நான் எழுதிய எழுத்துகள் பிடித்திருந்ததால்தானே
வெகுஜனப் பத்திரிகையாளர்கள் என்னைத் தங்களவன்
ஆக்கிக்கொண்டார்கள்? என் எழுத்து என்றைக்கும்
ஒரே எழுத்துதான். ஊடகங்கள் அதில் எந்த மாற்றத்தையும்
உருவாக்கவில்லை.

• ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் திருத்தங்களை
வலியுறுத்தும்போது ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் இல்லையா?
அப்படியான திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள்
எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும்
இல்லையா?

நான் மூர்க்கன் இல்லை. இது பரஸ்பரப் பகிர்தல்.
என்னிடமிருந்து அவர்களும் அவர்களிடமிருந்து நானும்
கற்றுக்கொள்வது. நிச்சயமாக அந்தத் திருத்தங்கள் எழுத்தில்
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஒருபோதும்
எழுத்துக்கு விரோதமான திருத்தங்களுக்கு
நான் செவிசாய்த்ததில்லை.

• ஊடகங்களுடனான உங்களுடைய உறவில்
ஓர் எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்குமான உறவு
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது
எந்தப் பத்திரிகையை, எந்தப் பத்திரிகை ஆசிரியரை?

விகடனை.
அதன் அன்றைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை.

• உங்கள் ஆரம்ப கால எழுத்துக்கள் என்ன வடிவத்தில்
இருந்தனவோ, அதே வடிவத்தில்தான் கடைசிக் கால
எழுத்துக்களும் இருந்தன. நீங்கள் கொஞ்சம்கூட உங்கள்
எழுத்து நடையை மாற்றிக் கொள்ளாததைப்
புதிய மாற்றங்களுக்கு ஜெயகாந்தன் முகங்கொடுக்கத்
தயாராகவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஜெயகாந்தனின் எழுத்துக்களை ஜெயகாந்தனே
விமர்சிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இந்த விமர்சனமெல்லாம் மற்றவர்கள் வேலை.
தங்களை விமர்சகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் வேலை.

• இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்,
அதாவது தமிழில்?

படிக்கிற மாதிரி எதுவும் இல்லை…
அதாவது தமிழில்.

• தமிழ் இலக்கியத்தில் 1990-க்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம்
நிகழ்ந்தது. ஒரு புதிய படையே உள்ளே புகுந்தது. தமிழ் நவீன
இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது.
ஆனால், நீங்கள் அதுபற்றியெல்லாம் மூச்சுவிடவே இல்லை.
கிட்டத்தட்ட உங்கள் வயதில் மூன்றில் ஒரு பகுதி
காலகட்டத்தில், உங்கள் மொழியில் புதிதாக
எழுத வந்தவர்களைப் பற்றி ஒரு மூத்த படைப்பாளியான
நீங்கள் எதுவும் பேசவில்லை. ஜெயகாந்தன்,
காலத்தின் வீட்டுக்குள் சென்று, எல்லாக் கதவுகளையும்
பூட்டிக்கொண்டு, ஊரே இருண்டு கிடக்கிறது என்று சொல்கிறார்
என்ற விமர்சனம் உங்கள் மீது உண்டு…

சரியில்லை.

• எது சரியில்லை, விமர்சனமா, ஜெயகாந்தன் காலத்தின்
எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டதா?

ஜெயகாந்தன் பூட்டிக்கொண்டது சரியில்லை.
ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது.

• இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்?
என்ன காரணம்?

இன்றைக்கும் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி.
நான் மொழியை ஆர்ப்பாட்டமாகப் பயன்படுத்தினேன்
என்றால், அவர் ரகசியமாகப் பயன்படுத்தியவர்.
அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

• ஒருகாலத்தில் அரசியல் மேடைகளில் ஒலித்த எழுத்தாளர்
குரல் உங்களுடையது. இன்னமும் உங்களிடம் அரசியல்வாதிகள்
பேசுகிறார்களா? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள்?

கலைஞர் பேசுவார். நல்லகண்ணு ஆஸ்பத்தியில்
இருக்கும்போதுகூட நேரில் வந்து பார்த்துப் போனார்.

• இளமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் முதுமையில்
மரணத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா?
ஆஸ்பத்திரியில் உயிர்ப் போராட்டத்தை எதிர்கொண்டபோது
மரணத்தை எப்படிப் பார்த்தீர்கள்?

அந்த நினைப்பே வரவில்லை. ஏதோ ஆஸ்பத்திரிக்கு
வந்திருக்கிறோம், மருத்து மாத்திரை கொடுக்கிறார்கள்,
உடம்பு சரியானதும் வீட்டுக்குப் போய்விடுவோம் என்று
நினைத்தேன். அதேபோல, உடம்பு சரியானதும் வீட்டுக்கு
வந்துவிட்டேன். மரணத்தின் மீது எந்தப் பயமும் இல்லை.

• என்ன கடமைகள் மீதி இருப்பதாக நினைக் கிறீர்கள்?

இந்தப் பிறப்புக்கு என் கடமைகளை முடித்து விட்டதாகவே
நினைக்கிறேன்.

• உங்கள் வாசகர்களுக்குச் சொல்ல சிறப்புச் செய்தி உண்டா?

ஞானகுரு பாரதி அன்றைக்குச் சொன்னதுதான்
என்றைக்கும் என் செய்தி:

ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும்,
உண்மையைச் சொல்ல வேண்டும்.
ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது!



-----------------------------------------


பின் குறிப்பு –

என் பிரியத்திற்குரிய ஜே.கே.யும்,
அவரது ‘ஞானகுரு’வும் –

“ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும்,
உண்மையைச் சொல்ல வேண்டும்.”

- என்று அவர்களுக்கேயான ‘ராஜபாட்டை’யில்
சென்றார்கள்.

அதே பாதையில் செல்ல – ஆசைப்பட்டாலும்
என்னால் இயலாது …..
எனவே, என் தகுதிக்கேற்ப, என் சக்திக்கேற்ப,

காலம்(ன்) அனுமதிக்கும் வரையில் -
என் ஒற்றையடிப் பாதையில் பயணிக்க
இயன்ற அளவில் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்…..

புதன், 11 மார்ச், 2015

தேவைக்கு மேல் ....






..

ஒருவர்  நிம்மதியாக வாழ அத்தியாவசியமான
தேவைகள் எவை ?

இருக்க இடம், உடுக்க துணி, பசிக்கு உணவு.
இதற்கு மேல் கல்வி, மருத்துவம் போன்ற
குடும்பத்தினரின் அவசிய செலவீனங்களைச் சந்திக்க
தேவையான  அளவு பணம்.

ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு

இதற்காக  மாதம் எவ்வளவு  தேவைப்படும் ?

சிக்கனமான குடும்பம் என்றால்15-20,000 ரூபாய் போதும்.
சிறிது தாராளமாக இருந்து பழக்கப்பட்டவர்கள் என்றால் -
ரூபாய்  20-25,000 போதுமானது.

இன்னும் சிறிது வசதியாகவும், சௌகரியமாகவும் வாழ
வேண்டும் என்றால் - ரூபாய் 30,000  தாராளம்.

கார், பங்களா  என்று  மிகவும் வசதியாக வாழும்
குடும்பம்  என்றால்,  மாதம் ரூபாய் ஒரு லட்சம்
இருந்தால்  தாராளம் - தாராளம்.

எப்படிப்பட்ட வசதியான குடும்பம் என்றாலும்,  மாதம்
ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்ய நியாயமான
காரணங்கள்  எதுவும் யாருக்கும் இல்லை.

"ஊருணி நீர்  நிறைந்தற்றே உலகுஅவாம்
பேரறிவாளன்  திரு " என்றார் வள்ளுவர்.

அதாவது அறிவும் கருணையும்  நிறைந்த ஒரு மனிதரிடம்
சேரும் செல்வம் - ஊருக்குப் பொதுவாக இருக்கும்
குடிநீர்க் குளத்தில் சேரும் தண்ணீரைப்போல்  அனைவருக்கும்
உதவியாக இருக்கும் என்றார்.

"மனிதன் பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை -
அதே போல் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப்
போவதில்லை.உன்னிடம் இருக்கும் செல்வம்  அனைத்தும்
இடையில் வந்தது. இன்று உன்னிடம் இருக்கும் செல்வம் -
நாளை வேறு  யாரிடமோ போகப்போகிறது.

நீ இறக்கும்போது உன் மனைவியோ, பிள்ளைகளோ,
நண்பர்களோ,  உறவினர்களோ - யாரும் உன்னுடன்
வரப்போவதில்லை. நீ அழைத்தாலும்  யாரும்
கூட வரத்தயாராக  இல்லை.

-  எனவே உனக்கு நிரந்தரமாகச் சொந்தம் இல்லாத
இவற்றின் மீதுள்ள பற்றினை அறுத்து  எறி "-

என்கிறார் பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்.

செல்வத்தைப் பெற்றுள்ள  எவரும்  அதற்கு சொந்தக்
காரர்கள்  அல்ல - அவர்கள்  பாதுகாவலர்கள் மட்டுமே
என்கிறது  கீதை. கோவில் அறங்காவலர்கள்  எப்படி
கோவிலையும் அதன் சொத்துக்களையும்  பராமரித்து
அவற்றை  முறையாகச் செலவு செய்கிறார்களோ
அது போல் செல்வந்தர்கள்  தங்களிடம் உள்ள செல்வத்தை
நல்ல முறையில் பராமரித்து  மற்றவர்களுக்காகப்
பயன்படுத்த வேண்டும் என்கிறது கீதை.

மேலே  சொல்லியதுபோல்  மிக மிகச் சிக்கனமாக
குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்வதாக இருந்தாலும்
ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 15,000 அவசியம்
என்கிற நிலையில் -

மாதம் 5000 ரூபாய்  கூட
சம்பாதிக்க வழி இல்லாமல் - நாயாய்,பேயாய் அலையும்,
அல்லல்படும் மனிதர்கள்  எவ்வளவு பேரை
அன்றாடம் பார்க்கிறோம் !

இருக்க இடம் இன்றி, நடைபாதையில் வசிக்கும்
குடும்பங்கள்  எத்தனை எத்தனை ?
ஒரு வேளைக் கஞ்சிக்கும்  ஆலாய்ப் பறக்கும்
குடும்பங்கள் எத்தனை ?

பள்ளிக்கூடம் செல்லாமல் பிளாட்பாரத்தில் அலையும்
சிறுவர்கள், டீ கடைகளில், மளிகைக் கடைகளில்,
காய்கறிக் கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள்
எத்தனை பேரைக் காண்கிறோம் ?

ஓடும் ரெயில்களில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும்
கண்பார்வை இல்லாத மனிதர்கள் எவ்வளவு பேரைப்
பார்க்கிறோம் ?

பகல் முழுதும் பிச்சை எடுத்து, இரவு நேரங்களில்
ரெயில்வே ஸ்டேஷன்களின் மேம்பாலங்களில்
படுத்துறங்கும் ஆதரவற்ற அநாதை முதியவர்கள்
எத்தனை பேர்களைப் பார்க்கிறோம்.

மன நலம் குன்றி, கவனித்துக் கொள்ள ஆளின்றி
தெருவில் அலையும் பாவப்பட்ட ஜென்மங்கள் எத்தனை
பேரைப் பார்க்கிறோம் ?

இவர்களைப்  பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு - நமக்கு,
இந்த சமுதாயத்திற்கு இல்லையா ? முக்கியமாக
மாதம்  லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள
பெரிய மனிதர்களுக்கு இல்லையா ?

"வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடினேன்"
- என்றார் வள்ளலார். பயிர்கள்  வாடுவதைக்கூட
காணப்பொறுக்காத வள்ளலார் அளவுக்கு  இல்லா
விட்டாலும்,இத்தனை  அவலங்களையும் பார்த்துக்கொண்டு,
மனச்சாட்சி உள்ள  மனிதர்கள்  சும்மா இருக்கலாமா ?

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த
ஜெகத்தினை அழித்திடுவோம் " என்றார்  பாரதி.
இதனையே  சற்று  மாற்றிச்சொன்னார்  கார்ல் மார்க்ஸ்.

அத்தகைய  அழிவு  ஏற்படாமல் தடுக்க நாம் முயற்சி
எடுக்க வேண்டாமா ?

தரமான இலவசக் கல்வியை அளிக்கும் பள்ளிக்கூடங்கள்
மிகுந்த எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

ஏழைச்சிறுவர், சிறுமிகள் தங்கி, உண்டு, படிக்க
தரமான இலவச  தங்கும் விடுதிகள் பல -தேவைப்படும்
இடங்களில் எல்லாம் கட்டப்பட வேண்டும்.

நல்ல மருத்துவ உதவியை அளிக்கக்கூடிய இலவச
மருத்துவமனைகள்  உருவாக்கப்பட்டு ஏழை நோயாளிகளை
நன்கு பராமரிக்க வேண்டும்.

ஆதரவற்ற முதியோர்களையும், பெண்களையும்,
குழந்தகளையும் பாதுகாக்க  ஆதரவற்றோர் இல்லங்கள்
உருவாக்கப்பட வேண்டும்.

தெருவில் அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை
தங்கவைத்து தக்க சிகிச்சை அளிக்க தகுந்த
மனநோயாளிகள் இல்லங்கள்  மாவட்டம்தோறும்
உருவாக்கப்பட வேண்டும்.

தொழில் பயிற்சி  அளிக்கக்கூடிய தொழில்கூடங்களை
உருவாக்கி, வேலையற்ற, உழைக்கும் தகுதியுள்ள
நபர்களுக்கு பயிற்சி அளித்து அவர்க்ளுக்கான
வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இவை அனைத்தும் இந்த சமுதாயத்தின் கூட்டுப்பொறுப்பு.
யாரிடம் அதிகப் பணம் இருக்கிறதோ -
யாரிடம்  செல்வம் குவிந்திருக்கிறதோ -அவர்கள்
தாமாகவே  இத்தகைய சமுதாயக் கடமைகளை
நிறைவேற்ற முன் வர வேண்டும்.

வருவார்களா ?

வரவில்லை என்றால் -அவர்களைச் செய்ய வைக்கவேண்டிய
பொறுப்பு   நமக்கு இருக்கிறது அல்லவா ?

என்ன  செய்யப்போகிறோம் ?